அன்பை மட்டுமே பரப்புங்கள், கொரோனாவை பரப்பாதீர்கள் என்று பிக்பாஸ் கேப்ரில்லா சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் ஜூனியர்ஸ் என்ற நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர் கேப்ரில்லா. இந்நிகழ்ச்சியில் வின்னராகவும் தேர்வு செய்யப்பட்டார். பின்னர், 2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வின்னரானார். இதே போன்று ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜீன்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்த நிலையில், தான் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4ஆவது சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. சின்னத்திரையில் மட்டுமல்லாமல், கேப்ரில்லா, தனுஷ் நடித்த 3 பட த்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாக நடித்து அசத்தினார். தொடர்ந்து என்றென்றும் புன்னகை, சென்னையில் ஒரு நாள், அப்பா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஜோடிகள் என்ற டான்ஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.
இந்த நிலையில், கேப்ரில்லா, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தான் வந்தேன். ஆனாலும், கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்துள்ளது. நான் நலமாக தான் இருக்கிறேன். உங்களது அன்பிற்கு நன்றி. நீங்களும் பாதுகாப்பாக இருங்கள். அன்பை மட்டுமே பரப்புங்கள், கொரோனாவை பரப்பாதீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.