அஜித் நடித்த மங்காத்தா படத்தை இயக்கிய இயக்குநர் வெங்கட் பிரபுவின் அம்மா உடல் நலக் குறைவு காரணமாக காலமானார்.
இயக்குநர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என்று பல திறமைகளை கொண்டவர் இசைஞானி இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன். கோழி கூவுது பட த்தின் மூலமாக தன்னை ஒரு சிறந்த இயக்குநராக காட்டிக் கொண்டார். அதன் பிறகு எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன், வில்லு பாட்டுக்காரன், சின்னவர், கோயில் காளை, அத்த மக ரத்தினமே, தெம்மாங்கு பாட்டுக்காரன், கும்பக்கர தங்கையா என்று ஏராளமான படங்களை இயக்கியுள்ளார். பெரும்பாலும் நடிகர் ராமராஜனை வைத்து பல படங்களை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிட த்தக்கது. இவரது படங்கள் அனைத்திற்கும் இளையராஜா தான் இசையமைத்துள்ளார்.
பல படங்களில் சினிமாவில் நடிக்கவும் செய்துள்ளார். இந்த நிலையில், இவரது மனைவியும், மங்காத்தா படத்தை இயக்கிய இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் பிரேம்ஜி அமரனின் தாயாருமான மணிமேகலை (69) நேற்று இரவு உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றிரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் டப்பிங் பணிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது.