கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சர்தார் படத்திற்காக ரூ.2 கோடிக்கு செட் போட்டு கொரோனா காரணமாக படக்குழுவினர் படப்பிடிப்பை நிறுத்தியுள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் கார்த்தி. சமீபத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா ஆகியோரது நடிப்பில் உருவான சுல்தான் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது இரும்புத்திரை, ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் இணைந்து சர்தார் படத்தில் நடித்து வருகிறார்.
சர்தார் படத்தில் இரு வேடங்களில் நடிக்கும் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். கார்த்தியின் இரு வேறு கதாபாத்திற்காக ரூ.2 கோடி பட்ஜெட்டில் செட் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், நாட்டையே உலுக்கி வரும் கொரோனா 2ஆவது அலையின் தாக்கம் காரணமாக ரூ.2 கோடியில் அமைக்கப்பட்ட செட்டில் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.
மேலும், இப்போதைக்கு சிறிய அளவிலான காட்சிகளை மட்டும் எடுக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். கொரோனா தாக்கம் குறைந்த பிறகு கார்த்தியின் இரு வேறு கதாபாத்திர காட்சிகள் ரூ.2 கோடியில் அமைக்கப்பட்ட செட்டில் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்தப் படம் தவிர, கார்த்தி இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.