அண்ணாத்த படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பிய நிலையில், தற்போது ரஜினிகாந்த் கொரோனா 2ஆவது தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் ரஜினியுடன் இணைந்து நயன்தாரா, மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், சதீஷ், சூரி ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஹைதராபாத்தில் நடந்த படப்பிடிப்பின் போது படக்குழுவினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, ரஜினிக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ரஜினியும் சென்னை திரும்பினார். கிட்டத்தட்ட 4 மாத இடைவெளிக்குப் பிறகு சட்டமன்ற தேர்தலில் வாக்களித்துவிட்டு ரஜினி மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அவருடன் இணைந்து படக்குழுவினரும் கலந்து கொண்டுள்ளனர்.
ஹைதராபாத்தில் நடந்து வரும் அண்ணாத்த படப்பிடிப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் ரஜினிகாந்த் தனது காட்சிகள் அனைத்தையும் முடித்துவிட்டு சென்னை திரும்ப இருக்கிறார் என்று குறிப்பிட்டிருந்தோம். அதன்படியே, இரவு, பகலாக தனது காட்சிகள் அனைத்தையும் ரஜினிகாந்த் நடித்து முடித்து விட்டு தற்போது சென்னை திரும்பியுள்ளார். வீட்டிற்கு வந்த ரஜினிகாந்தை அவரது மனைவி லதா ஆரத்தி எடுத்து அன்புடன் வரவேற்றுள்ளார்.
நாடு முழுவதும் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா 2ஆவது அலையின் காரணமாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், பலியானோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனினும், பலரும் கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகின்றனர். அந்த வகையில், அண்ணாத்த படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த் இன்று கொரோனா 2 ஆவது தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். அப்போது அவருடன் அவரது மகள் ஐஸ்வர்யா தனுஷ் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#NMNews23 Update:
Thalaivar @rajinikanth gets his vaccination today. @soundaryaarajni#Rajinikanth#StayhomeStaysafe pic.twitter.com/LdgfrhQBnc
— Nikil Murukan (@onlynikil) May 13, 2021