ரஜினிமுருகன் படத்தில் வரும் இது என்னடா மதுரக்காரனுக்கு வந்த சோதனை டயலாக் மூலம் பிரபலமான நடிகர் பவுன்ராஜ் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
நாட்டையே உலுக்கி வரும் கொரோனாவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் உயிரிழந்து வரும் நிலையில், சின்னத்திரையில் உடல் நலக் குறைவு காரணமாக பிரபலங்கள் பலரும் உயிரிழந்து வருகின்றனர். சமீபத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக வந்த நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து, தொடர்ந்து பிரபலங்களின் மறைவு செய்தி தான் வெளியாகி வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடந்து வந்த நெல்லை சிவா மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், உயிரிழந்தார். நேற்று தேன்மொழி பிஏ என்ற சீரியலில் ஜாக்குலினுக்கு அப்பாவாக நடித்த நடிகர் குட்டி ரமேஷ் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். இந்த நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் பவுன்ராஜ் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
இது குறித்து இயக்குநர் பொன்ராம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினிமுருகன், போன்ற படங்களில் நடித்தவரும் எனது கோ டைரக்டருமான பவுன்ராஜ் ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட்டார் அவருக்கு ஆழ்ந்த இரக்கங்கள்….
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஜெர்மனியில் எங்க அக்கா பையன் முறுக்கு போட்டுக்கிட்டு இருக்கான் காமெடியில் நடித்திருப்பார். இதே போன்று ரஜினிமுருகன் படத்தில் வரும் டீக்கடையில் வாழைப்பழம் எடுக்கும் போது இது என்னடா மதுரைக்காரனுக்கு வந்த சோதனை என்ற டயலாக் மூலமாக அதிகளவில் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
#RIPPawnraj வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினிமுருகன், போன்ற படங்களில் நடித்தவரும் எனது கோ டைரக்டருமான பவுன்ராஜ் ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட்டார் அவருக்கு ஆழ்ந்த இரக்கங்கள் pic.twitter.com/uxOdKTHp2z
— ponram (@ponramVVS) May 15, 2021