மதுரை தடுப்பூசி மையத்திற்கு சென்ற மதுரை முத்து முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட அசத்தப்போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சியின் மூலமாக அதிகளவில் பிரபலமானர். இதே போன்று கலக்கப் போவது யாரு என்ற நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு தனது நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தி இதே நிகழ்ச்சியின் 9ஆவது சீசனுக்கு நடுவராகவும் வலம் வந்தார். சண்டே கலாட்டா என்ற நிகழ்ச்சியிலும் நடுவராக வலம் வந்தார். ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தனது நடிப்புத் திறமையின் மூலமாகவும், திறமையான பேச்சு ஆற்றலாலும் உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்தார்.
இவ்வளவு ஏன், அண்மையில் நடந்து முடிந்த குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரையும் வியக்கவும், சிரிக்கவும் வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நாட்டாமையாகவும், பள்ளி மாணவனாகவும், கோமாளி என்று பல கதாபாத்திரங்களில் நடித்தார். இந்நிகழ்ச்சியில் புகழ், ஷிவாங்கியுடன் இணைந்து மதுரை முத்து செய்து வந்த அலப்பறைகள் கொஞ்சம் நஞ்சமல்ல. ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
இந்த நிலையில், நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்று காரணமாக, அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டி அனைவரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே அரசியல் பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதையடுத்து, தற்போது அருண் விஜய், சிம்ரன், கல்யாணி பிரியதர்ஷன், ரஜினிகாந்த், காயத்ரி என்று அனைவரும் கொரொனா தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது காமெடி நடிகர் மதுரை முத்துவும் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டுள்ளார். மதுரை அரசு மருத்துவமனை அருகிலுள்ள மாநகராட்சி பள்ளியில் செயல்படும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையத்திற்கு சென்று முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டார். அதன் பிறகு பேசிய அவர் தங்களது குடும்ப நலனுக்காக ஒவ்வொருவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஒவ்வொருவரும் மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டு கொண்டார் என்பது குறிப்பிட த்தக்கது.