Home Celebrities Shantini Deva: சாந்தினி விவகாரத்தில் முன் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மனு!

Shantini Deva: சாந்தினி விவகாரத்தில் முன் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மனு!

256
0

நடிகை சாந்தினி விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 5 ஆண்டுகாலமாக ஒன்றாக வாழ்ந்துவிட்டு திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நாடோடிகள் பட நடிகை சாந்தினி தேவா பரபரப்பாக புகார் அளித்துள்ளார். மதில் மேல் பூனை, நாடோடிகள், 2ஜி ஸ்பெக்டரம் என்று ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தவர் நடிகை சாந்தினி தேவா.

மலேசியாவைச் சேர்ந்த சாந்தினி தமிழகத்திலேயே செட்டிலாகிவிட்டார். இந்த நிலையில், சாந்தினி தேவா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பாக புகார் ஒன்றை அளித்துள்ளார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியிருப்பதாவது:

கடந்த 2017 ஆம் ஆண்டு பிசினஸ் விஷயமாக அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை சந்திக்க வேண்டும் என்று பிஆர் ஓ பரணி மூலமாக தெரியப்படுத்தினார். நானும் பிசினஸ் விஷயமாகத்தானே என்று அவரை சென்று சந்தித்தேன். அவர், எனது மனைவி என்னை கவனிக்கவில்லை. உன்னை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறினார்.

மேலும், அமைச்சர் என்பதால், அவருடன் நெருங்கி பழகினேன். நாளடைவில் நாங்கள் நண்பர்களாக மாறினோம். அதன் பிறகு தொடர்ந்து அமைச்சரின் பங்களாவிற்கு சென்று வந்தேன். அப்போது போலீஸ்காரர்கள் இங்கெல்லாம் வரக்கூடாது என்று கூறியதைத் தொடர்ந்து தனியாக கணவன் மனைவியாக கடந்த 5 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்தோம். இதில், நான் கருவுற்றேன்.

அமைச்சராக இருப்பதால், இப்போதைக்கு குழந்தை வேண்டாம் என்று கூறிய மணிகண்டன் கோபாலபுரம் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்தார். அதன் பின்னர், அரசு கேபிள் டிவி நிறுவனம் தொடர்பாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவரது பதவி பறிக்கப்பட்டது. தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலிலும் மணிகண்டனுக்கு சீட் வழங்கப்படவில்லை.

இப்படி அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து இப்போதைக்கு திருமணம் வேண்டாம், நான் மன உளைச்சலில் இருக்கிறேன் என்று கூறி வந்தார். தற்போது ஆபாச புகைப்படங்களை வைத்தும், ரவுடிகளை வைத்தும் என்னை மிரட்டி வருகிறார். 5 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், அவரது உடல்நிலையை நன்றாக பார்த்துக் கொண்டுள்ளார்.

தற்போது எனது உடல்நிலை மட்டும் பாதிப்படைந்துள்ளது. மேலும், திருமணம் செய்து கொள்ளவும் மறுப்பு தெரிவித்து வருகிறார். மலேசியாவில் இருக்கும் எனது பெற்றோர்களையும், போன் மூலமாக மிரட்டி வருகிறார். அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம், அவர் பேசிய ஆடியோ என்று பலவற்றை ஆதாரமாக கொடுத்துள்ளேன் என்று கூறியிருந்தார்.

சாந்தினியின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன், சாந்தினியை யாரென்றே தெரியாது. நான் ராமநாதபுரம் தொகுதியில் எம் எல் ஏ, அமைச்சராக இருந்த போது என்னிடம் வந்து எத்தனையோ பேர் புகைப்படம் எடுத்து இருக்கிறார்கள். அவர்களில் ஒருவராக் சாந்தினியும் இருந்திருக்கலாம். அப்போது எடுத்த புகைப்படத்தை வைத்துக் கொண்டு என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். இதனை நான் சட்டப்படி சந்திக்க தயார்.

என் மீது புகார் கொடுக்காமல் இருக்க வேண்டும் என்றால், ரூ.3 கோடி தர வேண்டும் என்று கேட்கிறார். தற்போது படிப்படியாக இறங்கி வந்து ரூ.50 லட்சம் வரையில் கேட்கிறார். எனக்கு மனைவியும், 3 குழந்தைகளும் இருக்கிறார்கள். எனது அரசியல் எதிரிகள் யாரோ பின்னணியில் இருந்து கொண்டு இது போன்று செய்யச் சொல்கிறார்கள். எனது மனைவியையும் போனில் மிரட்டுகிறார்கள் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மனைவி வசந்தி புகார் அளித்திருந்தார். அதில், சாந்தினி தன் கணவர் மீது அடுக்கடுக்காக பொய்யான குற்றசாட்டுகளை முன்வைத்துள்ளார். எங்கள் குடும்பத்திற்கு அவமானம் தேடித்தரும் வகையிலும், மன உளைச்சலையும் ஏற்படுத்தி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில் கூறியிருப்பதாவது: தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு தன்னிடம் எந்த ஆதாரமும் இல்லை. தன்னிடம் பணம் பறிக்கும் நோக்கத்தில் சாந்தினி இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு முன்னதாக மலேசியாவில் அவர் இது போன்று மோசடி செய்துள்ளார். மருத்துவ உதவிக்காகவே நான் அவருக்கு ரூ.5 லட்சம் கொடுத்தேன். அதனை திருப்பிக் கேட்கவே, தன்னை மிரட்டுவதாகவும், திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here