எனக்கே இப்போது கொரோனா தாக்கியுள்ளது ரொம்ப டேஞ்சர்ஸ் ஃப்ளோ என்று சென்றாயன் உருக்கமாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
கடந்த 2003 ஆம் ஆண்டு திரைக்கு வந்த சக்சஸ் என்ற படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சென்றாயன். இந்தப் பட த்தைத் தொடர்ந்து பொல்லாதவன், சிலம்பாட்டம், ஆடுகளம், ரௌத்திரம், மூடர் கூடம், பைசா, மெட்ரோ, ஸ்பைடர், விதி மதி உல்டா, பஞ்சுமிட்டாய், காத்திருப்போர் பட்டியல், வட சென்னை, அசுரன், சுல்தான் என்று வரிசையாக பல படங்களில் நடித்துள்ளார்.
இவ்வளவு ஏன், கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் தமிழ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் டான்சராக கலந்து கொண்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் ஜோடி ஜோடியாக கலந்து கொண்டு டான்ஸ் ஆடி வருகின்றனர். சென்றாயனும் கலந்து கொண்டு ஜூலியுடன் சேர்ந்து நடனம் ஆடினார்.
இந்த நிலையில், நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொரோனாவின் 2ஆவது அலை தற்போது சென்றாயனையும் தாக்கியுள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: மக்களே! வணக்கம் மக்களே. நான் நடிக்கல. ஆவி புடிச்சுக்கிட்டு இருக்கிறேன். வாழ்க்கையில் எல்லாத்தையும் நான் பாசிட்டிவாக தான் பார்ப்பேன். வாழ்க்கையில் ஜெயிக்கணும், சினிமாவுல ஜெயிக்கணும், உடம்ப நல்லா ஆரோக்கியமா வச்சிக்கிறனும் என்று பாசிட்டிவாகத் தான் பார்ப்பேன். இப்போ எனக்கே கொரோனா பாசிட்டிவாயிப் போச்சு. ஆரம்பத்துல கொரோனா வருமா என்று ரொம்ப அசால்ட்டா கவனக்குறைவாக இருந்தேன். எனக்கே இப்போ தாக்க ஆரம்பிச்சிருச்சு. அதனால மக்களே நீங்கள் ரொம்ப ரொம்ப கவனமாக இருங்கள்.
நான் இப்போது எனது வீட்டில் என்னுடைய அறையில் தனியாக இருக்கிறேன். என்னுடைய மனைவியும், குழந்தைகளும் மற்றொரு அறையில் பாதுகாப்பாக இருக்கிறார்கள். அப்பப்போ எனது மனைவி வந்து சாப்பாடு, பயறு, முட்டை எல்லாம் கொடுப்பாங்க. சாப்பிட்டு எனது அறையிலேயே இருக்கிறேன். நம்ம நினைப்பது போன்று கிடையாது. டேஞ்சர்ஸ் ஃப்ளோங்க என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.