நடிகர் பால சரவணனின் சகோதரியின் கணவர் கொரோனாவுக்கு பலியானதைத் தொடர்ந்து, மக்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனாவின் 2ஆவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலியானோர் எண்ணிக்கையும், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. சினிமா பிரபலங்கள் பலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பாடகர் கோமகன், பாண்டு, டிகேஎஸ் நடராஜன், நடிகர் கல்தூண் திலக் ஆகியோர் கொரோனாவுக்கு பலியாகினர். மேலும், ஆண்ட்ரியா, பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், அம்மு அபிராமி, நந்திதா ஸ்வேதா ஆகியோர் உள்பட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், நடிகர் பால சரவணனின் சகோதரியின் கணவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். இது தொடர்பாக, பால சரவணன் டுவிட்டர் மூலமாக வேண்டுகோள் வைத்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: அன்பு நண்பர்களே… இன்று எனது சகோதரியின் கணவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். அவருக்கு 32 வயது தான். மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நமக்கெல்லாம் கொரோனா வராது என்று நினைப்பது தவறு. நம்மை நம்மால் தான் பாதுகாக்க முடியும். முக கவசம் அணியுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.