பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான நடிகை ரம்யா பாண்டியன் தனது சித்தப்பாவை யாராலும் எதுவும் அசைக்க முடியாது, இரும்பு மனிதர் என்று சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் அருண் பாண்டியன். அண்மையில், இவர், தனது மகள் கீர்த்தி பாண்டியன் உடன் இணைந்து நடித்திருந்த அன்பிற்கினியாள் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. ஆனால், அதன் பிறகு அருண் பாண்டியனுக்கு அண்மையில், நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதன் பிறகு வீட்டு தனிமையில் மருத்துவ உதவி பெற்று வந்தார். 15 நாட்களுக்குப் பிறகு கொரோனா நெகட்டிவ் என்று வந்த பிறகு மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மதுரை மீனாட்சி மிஷின் மருத்துவமனையில் ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் இதயத்தில் 2 அடைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டது. அதன் பின் ஆஞ்சியோபிளாஸ்டிக் மூலமாக சிகிச்சை அளிக்கபட்டு அடைப்பு சரிசெய்யப்பட்டது. தற்போது நலமுடன் இருக்கிறார் என்று அவரது மகள் கீர்த்தி பாண்டியன் மற்றும் கவிதா பாண்டியன் ஆகியோர் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தனர்.
இதையடுத்து, அருண் பாண்டியன் விரைவில் நலம் பெற வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கவிதா பாண்டியனின் பதிவுக்கு கருத்து தெரிவித்துள்ள ரம்யா பாண்டியன் சித்தப்பா ஒரு இரும்பு மனிதர், அவரை யாராலும் எதுவும் அசைக்க முடியாது. விரைவில், அவர் குணமடைய பிரார்த்தனை செய்கிறோம். கண்டிப்பாக அவர் நலமுடன் திரும்புவார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிட த்தக்கது.