நடிகையின் 11 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நடிகருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு ஒளிபரப்பு செய்யப்பட்ட Dil Ki Nazar Se Khoobsurat என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் பாலிவுட் தொலைக்காட்சியில் நடிகராக அறிமுகமானவர் பியர்ல் வி புரி. ஆனால், நாகின் 3 என்ற தொடரின் மூலமாகவே அதிகளவில் பிரபலமாகியுள்ளார். பிக்பாஸ் 12, பிக்பாஸ் 13 ஆகிய நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டுள்ளார். தற்போது Brahmarakshas 2 என்ற தொடரில் நடித்து வருகிறார்.
நடிப்பதற்கு முன்னதாகவே தனது சொந்த ஊரான ஆக்ராவைச் சேர்ந்த பெண்ணுடன் கிட்டத்தட்ட 9 வருட உறவில் இருந்தார். நடிப்பின் காரணமாக அந்த உறவை முறித்துள்ளார். அதன் பிறகு 2015 ஆம் ஆண்டு அஸ்மிதா சூட் என்பவருடன் உறவில் இருந்தார். ஆனால், அந்த உறவு ஒரு வருடத்திலேயே முறிந்துள்ளது.
இந்த நிலையில், சக நடிகையின் 11 வயது மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சிறுமியின் தந்தை மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால், இச்சம்பவம் நடந்த பகுதியான வாலிவ் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பியர்ல் புரியை கைது செய்த போலீசார் அவர் மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் போக்சோ ஆகிய சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அதன் பிறகு வசாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். அப்போது, பியர்ல் புரியை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.