தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் டிரைலர் நாளை காலை 10 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள படம் ஜகமே தந்திரம். இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்து சஞ்சனா நடராஜன், ஐஸ்வர்யா லெட்சுமி, கலையரசன், சின்னி ஜெயந்த் ஆகியோர் உள்பட சினிமா பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
கடந்தாண்டு மே மாதம் திரைக்கு வர இருந்த நிலையில், கொரோனா லாக்டவுன் காரணமாக வெளியாகவில்லை. இந்த ஆண்டும், கொரோனா 2ஆவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வரும் ஜூன் 18 ஆம் தேதி ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில், இந்தப் படத்தின் இடம் பெற்றுள்ள நேத்து பாடலின் வீடியோ வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில், தற்போது ஜகமே தந்திரம் பட த்தின் டிரைலர் குறித்து முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் ஜூன் 1 ஆம் தேதி ஜகமே தந்திரம் படத்தின் டிரைலர் வெளியாகும் என்று இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில், யார் இந்த சுருளி என்பதை காண்பதற்கு நாளை காலை 10 மணி வரையில் காத்திருக்க வேண்டும் என்று படத்தை வெளியிடும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் டுவிட்டரில் வெளியிட்டுள்ளது. அதாவது, ஜகமே தந்திரம் படத்தின் டிரைலர் நாளை காலை 10 மணிக்கு வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.