கர்ணன் படம் மூலமாக பிரபலமான நடிகர் நட்டி என்ற நடராஜன் கொரோனா முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனாவின் 2ஆவது அலை தற்போது நாடு முழுவதும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு சினிமா பிரபலங்களான இயக்குநர், ஒளிப்பதிவாளர் கேவி ஆனந்த், இயக்குநர் தாமிரா, நடிகர் பாண்டு, பாடகர் கோமகன், டிகேஎஸ் நடராஜன் என்று பலரும் உயிரிழந்துள்ளனர்.
நந்திதா ஸ்வேதா, ஆண்ட்ரியா, அம்மு அபிராமி, டேனியல் பாலாஜி, சென்றாயன் என்று பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், நடிகர் நட்டி என்ற நடராஜன் இன்று தங்களது முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். அண்மையில், தனுஷ் நடிப்பில் வந்த கர்ணன் படத்தில் போலீஸ் அதிகாரியாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.
கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி திரைக்கு வந்த கர்ணன் படம் இன்று ஓடிடி தளமான அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் மூலமாக நடிகர் நடராஜன் அதிகளவில் பிரபலமாகியுள்ளார். இனி வில்லன் கதாபாத்திரங்களில் தான் நடராஜன் அதிகளவில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.