Home Celebrities வடிவேலுவின் கெணத்த காணோம் போலீஸ் நெல்லை சிவா காலமானார்!

வடிவேலுவின் கெணத்த காணோம் போலீஸ் நெல்லை சிவா காலமானார்!

373
0

திரைப்பட நடிகர் நெல்லை சிவா மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

கடந்த 1985 ஆம் ஆண்டு திரைக்கு வந்த ஆண் பாவம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் நெல்லை சிவா. இந்தப் பட த்தைத் தொடர்ந்து என் ஆசை மச்சான், சீவலப்பேரி பாண்டி, சிந்துபாத், அருவா வேலு, டாடா பிர்லா, வாழ்க ஜனநாயகம், கண்ணாத்தாள், உன்னருகே நான் இருந்தால், சுயம்வரம், வெற்றி கொடிக்கட்டு, கண்ணன் வருவான், இவன், ரன், அன்பே சிவம், திருப்பாச்சி, இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி, மணிகண்டா, ஓரம் போ, திருத்தம், சுட்ட பழம், தித்திக்கும் இளமை, இயக்கம், அழைப்பிதழ், மதுரை டூ தேனி, அழகான பொண்ணுதான், பட்டத்து யானை, மிருதன், ஜித்தன் 2, சீமதுரை, கழுகு 2, பேய் இருக்க பயமேன், பழகிய நாட்கள் என்று பல படங்களில் நடித்துள்ளார். இவ்வளவு ஏன், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹாட்ஸ்டாரில் வெளியான பரமபதம் விளையாட்டு படத்திலும் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்துள்ள நெல்லை சிவா, குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், நகைச்சுவை ரோலிலும் நடித்துள்ளார். வடிவேலுவின் கெணத்த காணோம் டயலாக்கில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து தனது அபார நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார்.

வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல், சின்னத்திரையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொலைக்காட்சியிலும் நடித்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட மாமா மாப்பிள்ளை என்ற தொடரிலும் நடித்துள்ளார்.

கடந்த 1952 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் பனங்குடியில் உள்ள வேப்பிலங்குளம் என்ற பகுதியில் சிவநாதன் சண்முகவேலன் ராம மூர்த்தியாக பிறந்தவர் நெல்லை சிவா. சிவாஜி கணேசனின் தீவிர ரசிகரான இவர், சினிமாவில் காலூன்றவே சென்னை வந்தார். அப்போது வளர்ந்து வரும் நடிகர்களாக இருந்த மன்சூர் அலி கான், போண்டா மணி ஆகியோரது நட்பைப் பெற்றார். அதன் பிறகு கே பாக்யராஜ் உதவியுடன் தொலைக்காட்சியில் வலம் வந்தார். திருநெல்வேலி பாஷையில் அசத்திய நிலையில், அவருக்கு எளிதில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில், நெல்லையில் வசித்து வந்த 69 வயதான நெல்லை சிவாவுக்கு இன்று திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலங்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here