எட்டுப்பட்டி ராசா உள்பட ஒரு சில படங்களில் நடித்த நடிகரும், தயாரிப்பாளருமான ஜி ராமசந்திரன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.
கொரோனா காரணமாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து சினிமா பிரபலங்கள் பலரும் உயிரிழந்து வருகின்றனர். இயக்குநர் கே வி ஆனந்த், தாமிரா, பாண்டு, கோமகன், சிந்துஜா, வெங்கட் சுபா, பவுன்ராஜ் என்று பிரபலங்கள் பலரும் கொரோனாவுக்கு பலியாகினர். இவர்கள் தவிர, நெல்லை சிவா, கங்கை அமரனின் மனைவி மணிமேகலை ஆகியோர் உள்பட ஒரு சில வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தனர். இந்த நிலையில், களத்தூர் கண்ணம்மா, நாட்டுப்புற பாட்டு, வீர தாலாட்டு, எட்டுப்பட்டி ராசா, ராஜாதி ராஜா, மனுநீதி என்று ஒரு சில படங்களில் நடித்த நடிகரும், தயாரிப்பாளருமான ஜி ஆர் என்ற ஜி ராமச்சந்திரன் (73) உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை காலமானார்.
எங்க ராசி நல்ல ராசி, காதலி காணவில்லை, சவுண்ட் பார்ட்டி, காசு இருக்கணும், மனுநீதி ஆகிய படங்களை ராமச்சந்திரன் தயாரித்துள்ளார். அண்மையில், ராமச்சந்திரனின் மனைவியும், தயாரிப்பாளருமான ஆர் பி பூரணி மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் தான் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜி ராமச்சந்திரனின் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.