ஹைதராபாத்தில் நடந்து வரும் அண்ணாத்த படப்பிடிப்பு முடிந்த பிறகு ரஜினிகாந்த் அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் ரஜினியுடன் இணைந்து நயன்தாரா, மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், சதீஷ், சூரி ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஹைதராபாத்தில் நடந்த படப்பிடிப்பின் போது படக்குழுவினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, ரஜினிக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ரஜினியும் சென்னை திரும்பினார். கிட்ட த்தட்ட 4 மாத இடைவெளிக்குப் பிறகு சட்டமன்ற தேர்தலில் வாக்களித்துவிட்டு ரஜினி மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அவருடன் இணைந்து படக்குழுவினரும் கலந்து கொண்டுள்ளனர்.
ஹைதராபாத்தில் நடந்து வரும் அண்ணாத்த படப்பிடிப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் ரஜினிகாந்த் தனது காட்சிகள் அனைத்தையும் முடித்துவிட்டு சென்னை திரும்ப இருக்கிறார். அதன் பிறகு அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. எனினும், இது குறித்து முறையான அறிவிப்பு வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே அறிவித்தபடி, அண்ணாத்த படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.