மற்றவர்களைப் போன்று தனக்கும் பொருளாதார ரீதியாக பிரச்சனை இருப்பதாக நடிகை ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ஸ்ருதி ஹாசன். கடந்த 2011 ஆம் ஆண்டு திரைக்கு வந்த 7ஆம் அறிவு படத்தின் மூலமாக சினிமாவில் ஹீரோயினாக அவதாரம் எடுத்தார். இந்தப் பட த்தைத் தொடர்ந்து 3, பூஜை, புலி, வேதாளம், எஸ்ஐ3 ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார். தமிழ் மொழியைத் தவிர, தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது லாபம் என்ற தமிழ் படத்திலும், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் உருவாகி வரும் சலார் என்ற படத்திலும் நடித்து வருகிறார். கொரோனா காரணமாக நாடு முழுவதும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு பாண்டு, கோமகன், தாமிரா, கே வி ஆனந்த், கலைச் செல்வன் என்று பிரபலங்கள் பலரும் பலியாகியுள்ளனர்.
மத்திய, மாநில அரசுகள் கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. வரும் 24 ஆம் தேதி வரையில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. மாஸ் ஹீரோக்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், சமீபத்தில் ஸ்ருதிஹாசன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இந்த இக்கட்டான காலகட்டத்தில் படப்பிடிப்பு நடத்துவது சிக்கல் தான். ஆனால், கொரோனா முடியும் வரையும் காத்திருக்கவும் முடியாது.
அனைவரையும் போலவே எனக்கும் பொருளாதார பிரச்சனை இருக்கிறது. ஆகையால், வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம். படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியதும் நான் கண்டிப்பாக படப்பிடிப்புக்கு செல்வேன். கிட்ட த்தட்ட 11 வருடங்களாக எனது தேவைகளை நானே சுயமாக சம்பாதித்து பார்த்துக் கொள்கிறேன். சொந்த வாழ்க்கை, தொழில் சம்பந்தமான அனைத்து முடிவுகளையும் நானே எடுக்கிறேன்.
கொரோனா தொற்றுக்கு முன்னதாக நான் சொந்தமாக வீடு வாங்கியிருந்தேன். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நான் வீட்டிலேயே இருக்கிறேன். அனைவரும் பாதுகாப்பாக வீட்டிலேயே இருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.