தனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடிகை சுனைனா தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனாவின் 2ஆவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலியானோர் எண்ணிக்கையும், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. சினிமா பிரபலங்கள் பலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பாடகர் கோமகன், பாண்டு, டிகேஎஸ் நடராஜன், நடிகர் கல்தூண் திலக் ஆகியோர் கொரோனாவுக்கு பலியாகினர். இன்று பழம்பெரும் நடிகர் ஜோக்கர் துளசி கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். மேலும், ஆண்ட்ரியா, பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், அம்மு அபிராமி, நந்திதா ஸ்வேதா ஆகியோர் உள்பட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
அந்த வரிசையில், தற்போது நடிகை சுனைனாவும் இணைந்துள்ளார். தனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுனைனா பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: என்னதான் அதிகமாக பாதுகாப்புடன் இருந்தாலும் எனக்கு கொரோனா 19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. வீட்டில் என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டேன். மேலும், அதற்கான அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன். எனது குடும்பத்தினர் தவிர வேறு யாருடனும் நான் தொடரில் இல்லை. எனது குடும்பத்தினரும் தற்போது தனிமையில் இருக்கின்றனர்.
சமூக வலைதள பக்கத்தை ஒதுக்கி வைத்துவிட்டு ஓய்வெடுக்க நினைத்தாலும், தேவைப்படுவோருக்கு சின்னதாகவோ அல்லது பெரிதாகவோ உதவியாக இருக்கும் வகையிலான தகவல்களை பகிரவும், ரீ டுவீட் செய்யவும், ரீ போஸ்ட் செய்யும் வாய்ப்பை நான் இழக்க விரும்பவில்லை. ஆகையால், என்னால், முடிந்தவற்றை நான் செய்ய இருக்கிறேன்.
தயவு செய்து முகக் கவசம் அணிந்து கொள்ளுங்கள், வீட்டிலேயே இருங்கள். உயிர்களை காப்பாற்றுங்கள். நான் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன் என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
— SUNAINAA (@TheSunainaa) May 10, 2021