Home Celebrities மக்களின் முதல்வர் மு.க.ஸ்டாலின்: சூர்யா வாழ்த்து!

மக்களின் முதல்வர் மு.க.ஸ்டாலின்: சூர்யா வாழ்த்து!

145
0

மக்களின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த 16ஆவது சட்டமன்றத் தேர்தலில் 125 இடங்களை கைப்பற்றி திமுக வெற்றி வாகை சூடியது. இதையடுத்து, இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவி ஏற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் இணைந்து 33 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர்.

இந்த நிலையில், இன்று தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதில், நடிகர் சிவகுமார் வீடியோ மூலமாக வாழ்த்து தெரிவித்துள்ளார். இவரைத் தொடர்ந்து நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதில், அவர் கூறியிருப்பதாவது:

முடியுமா நம்மால் என்பது தோல்விக்கு முன்பு வரும் தயக்கம்…

முடித்தே தீருவோம்! என்பது வெற்றிக்கான தொடக்கம்…

முத்தமிழ் அறிஞர் கலைஞர்.

முடித்தே தீர வேண்டிய பல காரியங்கள் வரிசைகட்டி முன் நிற்க சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று மக்களின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.

சுவாசிப்பதற்கு உயிர் காற்று கூட கிடைக்காமல் மக்கள் அல்லல்படுகிற இந்த பேரிடர் காலத்தில் நீங்கள் ஆட்சி பொறுப்பிற்கு வந்திருப்பது மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. தங்கள் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தமிழகம் வளர்ச்சியடையும் என்று நம்புகிறோம். தங்களுக்கும், ஆற்றலும் அனுபவமும் நிறைந்த மாண்புமிகு தமிழக அமைச்சர் பெருமக்களுக்கும் மனப்பூர்வமான வாழ்த்துகள்.

தமிழகத்தின் உரிமைகளை மீட்க தமிழர்களின் ஒருமித்த குரலாக இனி உங்கள் குரல் ஒலிக்கட்டும்… அன்புடன் சூர்யா என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here