நாடு முழுவதும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா 2ஆவது அலையின் காரணமாக பலியானோர் எண்ணிக்கையும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அப்படி கொரோனாவால் உயிரிழந்த பிரபலங்களில் இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே வி ஆனந்தும் ஒருவர். கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரைத் தொடர்ந்து, இயக்குநர் தாமிரா, பாண்டு, டிகேஎஸ் நடராஜன், நெல்லை சிவா, நடிகர் மணிமாறன், ஆட்டோகிராஃப் கோமகன் என்று பிரபலங்கள் பலரும் கொரோனாவுக்கு பலியாகி வந்தனர். அந்த வரிசையில், தற்போது இளம் தயாரிப்பாளர் கலைச்செல்வன் கொரோனா பாதித்த நிலையில், உயிரிழந்துள்ளார்.
இயக்குநர் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் நடிகர் சாருஹாசன் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் தா தா 87. இந்தப் படத்தை கலை சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர் கலைச்செல்வன் தயாரித்திருந்தார். இளம் தயாரிப்பாளரான எம் கலைச் செல்வன் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சினிமா பிரபலங்கள் பலரும் கலைச் செல்வன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.