Home celebrities ஒவ்வொரு பூக்களுமே புகழ் கோமகன் கொரோனால் காலமானார்!

ஒவ்வொரு பூக்களுமே புகழ் கோமகன் கொரோனால் காலமானார்!

484
0

சேரன் நடிப்பில் வந்த ஆட்டோகிராஃப் படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பூக்களுமே பாடலை பாடிய பாடகர் கோமகன் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா 2ஆவது அலை காரணமாக நாடு முழுவதும் எத்தனையோ பேர் பலியாகி வருகின்றனர். அதோடு, பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக கொரோனாவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் பலியாகி வரும் செய்தி சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இயக்குநர், ஒளிப்பதிவாளர் கேவி ஆனந்த், இயக்குநர் தாமிரா, டிகேஎஸ் நடராஜன், பாண்டு ஆகியோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். அந்த வகையில், தற்போது சேரன், சினேகா ஆகியோரது நடிப்பில் வந்த ஆட்டோகிராஃப் படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு பூக்களுமே பாடலில் இடம்பெற்ற மனிதா உன் மனதைக் கீறி விதை போடும் மரமாகும் என்ற பாடல் வரிகள் மூலமாக பிரபலமான கோமகனும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.

பிறக்கும் போதே கண் பார்வை குறைபாடு கொண்ட கோமகன், தனது பெயரிலேயே கோமகனின் இசைக்குழுவையும் ஒன்றையும் நடத்தி வந்தார். பாடும் திறன் கொண்ட கோமகனுக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது கிடைத்தது.

ரயில் பெட்டி தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த கோமகன் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 1 மணிக்கு உயிரிழந்தார். கோமகனுக்கு அனிதா என்ற மனைவியும் மோனஸ், மோவின் என்ற இரு மகன்களும் இருக்கின்றனர்.

கோமகன் மறைவுக்கு சினிமா பிர்பலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கோமகனின் மறைவுக்கு சேரன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது: வார்த்தைகள் இல்லை… மனதிலும் குரலிலும் முழுக்க தன்னம்பிக்கை கொண்ட மனிதர்… அவருடைய குழுவில் உள்ள 25 குடும்பங்களுக்கு கண்களாக விளங்கியவர்.. காலையில் எழுந்ததும் கேள்விப்பட்ட இந்த செய்தி நெஞ்சை நொறுக்கியது..கோமகனின் ஆன்மா அமைதி கொள்ளட்டும்… என்று குறிப்பிட்டுள்ளார்.

Previous articleஅதிமுக கொடியை வடிவமைத்த நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனாவால் காலமானார்!
Next articleமச்சான் வந்துட்டேன்: நமீதா தியேட்டர் பெயரில் ஓடிடி தளம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here