வலிமை படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து 3 படங்களில் நடிப்பதற்கு அஜித் திட்டமிட்டுள்ளதாக புதிதாக தகவல் ஒன்று வெளியாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித். நேர்கொண்ட பார்வை பட த்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து 2ஆவது முறையாக இயக்குநர் ஹெச் வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணியில் இணைந்து வலிமை பட த்தில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட அனைத்து காட்சிகளும் முடிக்கப்பட்ட நிலையில், இன்னும் ஒரேயொரு சண்டைக் காட்சி மட்டுமே எடுக்கப்பட இருக்கிறதாம். அதுவும், ஸ்பெயின் நாட்டில் தான் அந்தக் காட்சியை எடுக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனராம்.
தற்போது நாட்டையே உலுக்கி வரும் கொரோனா 2ஆவது அலை காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், சில படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு குறைந்த பிறகே படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போலீஸ் கதையை மையப்படுத்திய வலிமை படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். சென்னை, ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் வலிமை படப்பிடிப்பு நடந்துள்ளது.
வலிமை படத்தில் அஜித்துடன் இணைந்து, ஹூமா குரேஸி, கார்த்திகேய கும்மகோண்டா, சிவாஜி குருவாயூர், பவல் நவகீதன், யோகி பாபு, குர்பானி ஜட்ஜ், அஜ்யுத் குமார், சுமித்ரா, ராஜ் அய்யப்பா, புகழ், சங்கீதா ஆகியோர் உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வலிமை படம் திரைக்கு வர இருந்தது. ஆனால், கொரோனா காரணமாக தற்போது வரை ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை.
வலிமை படத்தைத் தொடர்ந்து அஜித் 3ஆவது முறையாக இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். தல61 என்று தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்ட படத்தை மீண்டும் போனி கபூர் தயாரிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது.
இந்த நிலையில், அஜித் நடிக்கயிருக்கும் அடுத்த 2 படங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பெண் இயக்குநரான சுதா கொங்கரா இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து இயக்குநர் சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே இயக்குநர் சிவா இயக்கத்தில் அஜித் வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், அஜித் நடிக்க இருக்கும் படங்கள் குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை.