தளபதி விஜய் நடிப்பில் வந்த மெர்சல் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 1985 ஆம் ஆண்டு முதல் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் படங்களை தயாரித்து, விநியோகம் செய்து வருகிறது. அம்பிகா, ராதா ரவி, சந்திரசேகர் ஆகியோரது நடிப்பில் வந்த நாகம் படத்தை தயாரித்துள்ளது. 1990 ஆம் ஆண்டிற்குப் பிறகு 2000 ஆம் ஆண்டிற்கு முன்னதாக பாளையத்து அம்மன், நாகேஸ்வரி, கோட்டை மாரியம்மன், அன்னை காளிகாம்பாள் என்று பக்தி படங்களை தயாரித்துள்ளது.
தொடர்ந்து ஆடி வெள்ளி, விஸ்வநாதன் ராமமூர்த்தி, துர்கா, செந்தூர தேவி, பொதுவாக என் மனசு தங்கம், மெர்சல், தில்லுக்கு துட்டு, ஆறாது சினம், ஆர்யா சூர்யா, குட்டி பிசாசு, மண்ணின் மைந்தன் என்று ஏராளமான படங்களை இந்நிறுவனம் தயாரித்துள்ளது.
இதே போன்று அரண்மனை, டிமான்டி காலனி, காஞ்சனா 2, மாயா என்று த்ரில்லர் படங்களை விநியோகம் செய்துள்ளது. கிட்ட த்தட்ட 700க்கும் அதிகமான படங்களை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் விநியோகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இந்நிறுவனத்தின் உரிமையாளர் ராம நாராயணனின் மகனும், தயாரிப்பாளருமான முரளி ராமசாமி மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.