நடிகர் அருண் விஜய் மற்றும் நடிகை சிம்ரன் ஆகியோர் தங்களது முதல் தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனாவின் 2ஆவது அலை தற்போது நாடு முழுவதும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு சினிமா பிரபலங்களான இயக்குநர், ஒளிப்பதிவாளர் கேவி ஆனந்த், இயக்குநர் தாமிரா, நடிகர் பாண்டு, பாடகர் கோமகன், டிகேஎஸ் நடராஜன் என்று பலரும் உயிரிழந்துள்ளனர்.
நந்திதா ஸ்வேதா, ஆண்ட்ரியா, அம்மு அபிராமி என்று பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், நடிகர் அருண் விஜய் மற்றும் நடிகை சிம்ரன் ஆகியோர் தங்களது முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகர் அருண் விஜய் கூறியிருப்பதாவது: உலகம் எதிர்கொண்டுள்ள இந்த இருண்ட காலங்களில் புத்திசாலித்தனமாக செயல்படுவது நமது சமூக பொறுப்பு. பாதுகாப்பு நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்றுங்கள், தடுப்பூசி எடுத்துக் கொண்டேன். வீட்டிலேயே இருங்கள். பாதுகாப்பாக இருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதே போன்று சிம்ரன் கூறியிருப்பதாவது: பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பதற்கு நோய்களிலிருந்து காக்கும் அனைத்தையும் செய்ய விரும்புகிறார்கள். அதற்கு சிறந்த வழி தடுப்பூசி மட்டுமே. நான் எனது முதல் தடுப்பூசியை எடுத்துக் கொண்டேன். நீங்கள் நேசிக்கும் ஒவ்வொருவரையும் பாதுகாக்க உங்களது பங்கை அளியுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.