தமிழ் படம் இயக்குநர் சி எஸ் அமுதன் முதல்வரின் கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதி இல்லை. மேலும், ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் பிரபலங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என்று பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். அண்மையில், சன் டிவி நிறுவனம் ரூ. 30 கோடி கொரோனா நிவாரண நிதியாக அளித்திருந்தது.
தமிழக முதல்வர் கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டுகோள் வைத்திருந்தார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குங்கள். பொது மக்கள், சமூக நல அமைப்புகள், பெருந்தொழில் நிறுவனங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்…ரூ.10 லட்சத்திற்கு மேல் நிதியுதவி வழங்குபவர்களின் பெயர்கள் பத்திரிகையில் வெளியிடப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், தமிழக முதல்வரை நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்து கூறியதோடு, கொரோனா நிவாரண நிதியாக ரூ.25 லட்சமும் வழங்கியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவரைப் போன்று நடிகரும், சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் ரூ.25 லட்சம் முதல்வரின் கொரோனா தடுப்பு பணிக்காக வழங்கியுள்ளார்.
இதைத் தொடர்ந்து தமிழ் படம், தமிழ் படம் 2 ஆகிய படங்களை இயக்கிய இயக்குநரும், மின்னலே, தமிழ் படம், அநேகன், தமிழ் படம் 2 ஆகிய படங்களில் பாடலாசிரியராகவும் பணியாற்றியவருமான சி எஸ் அமுதன், முதல்வரின் கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.50 ஆயிரம் வழங்கியுள்ளார். இதனை முதல்வர் வழங்கிய அக்கவுண்ட் எண்ணிற்கு நேரடியாக தனது மொபைல் போன் மூலமாக வழங்கியுள்ளார். மேலும், அனைவரையும் நன்கொடை வழங்குமாறு வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில தினங்களுக்கு முன்னதாக நடிகர் சிவக்குமார், நடிகர் கார்த்தி மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் முதல்வரை சந்தித்து, ரூ.1 கோடி கொரோனா தடுப்பு பணிக்காக வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
I have donated to @CMOTamilnadu ‘s Chief Minister Public Relief Fund. This is the endgame guys, donate generously. pic.twitter.com/qv04xhwGr7
— CS Amudhan (@csamudhan) May 13, 2021