சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள டாக்டர் படத்தின் ரிலிஸ் தேதி குறித்து இப்போதைக்கு எதுவும் பேச விருப்பமில்லை என்று தயாரிப்பாளர் கேஜேஆர் ஸ்டூடியோஸ் ராஜேஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் இருந்து வந்து மாஸ் ஹீரோவுக்கு இணையாக வளர்ந்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு மிஸ்டர் லோக்கல், நம்ம வீட்டுப் பிள்ளை, ஹீரோ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்தப் படங்களைத் தொடர்ந்து, டாக்டர் மற்றும் அயலான் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் டாக்டர் வருண் என்ற கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் கடந்த மார்ச் 26 ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், தமிழகத்தில் நடக்க இருந்த சட்டமன்ற தேர்தல் காரணமாக டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது நாட்டையே உலுக்கி வரும் கொரோனாவின் 2ஆவது அலை காரணமாக இந்தியா முழுவதும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கையும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு போதுமான அளவு படுக்கை வசதியும் கிடைக்கவில்லை. ஆக்சிஜன் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகளுடன் இணைந்து மக்களும் போராடி வரும் இந்த இக்கட்டான சூழலில் சினிமா பிரபலங்கள், தொண்டு நிறுவனங்கள் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். இப்படிப்பட்ட இந்த இக்கட்டான சூழ்நிலையில், சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் தொடர்ந்து டாக்டர் படம் எப்போது வெளிவரும் என்று கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில், டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அதன் தயாரிப்பாளரான கே ஜே ஆர் ஸ்டூடியோஸ் ராஜேஷ் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: தொடர்ந்து டாக்டர் பட த்தின் ரிலீஸ் தேதி குறித்து கேள்வி எழுப்பி வருகிறீர்கள். முழுமையாக முடிக்கப்பட்ட ஒரு படத்தை கையில் வைத்துக் கொண்டு கொரொனாவால் ஏற்பட்ட பொருளாதார ரீதீயிலான கட்டுபாடுகள் அனைத்தையும் தாங்கிக் கொண்டு நான் இருக்கிறேன். அப்படியிருந்தும் படத்தை வெளியிட எனது தகுதிக்குட்பட்ட அனைத்து வேலைகளையும் நான் செய்து வருகிறேன்.
மற்றொரு பக்கம் எனது சுற்றங்களையும், நண்பர்களையும் கொரோனாவால் இழந்து கொண்டிருக்கிறேன். இது போன்ற ஒரு இக்கட்டான சூழலில் டாக்டர் ரிலீஸ் குறித்து எதுவும் பேச விரும்பவில்லை. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். வீட்டில் பாதுகாப்பாக இருந்து உங்களையும், உங்களது குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Doctor #DoctorUpdate #StaySafe 🙏🏽 pic.twitter.com/FC1x0PJ4Kw
— KJR Studios (@kjr_studios) May 12, 2021