உக்ரைன் நாட்டில் நடக்கும் 50ஆவது மோலோடிஸ்ட் சர்வதேச திரைப்பட விழாவில் நயன்தாராவின் கூழாங்கல் படம் திரையிட தேர்வாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் நம்பர் 1 நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. கடைசியாக இவரது நடிப்பில் தர்பார் மற்றும் மூக்குத்தி அம்மன் ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றன. தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த மற்றும் காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இது தவிர ஒரு மலையாள படத்திலும் நடித்து வருகிறார். காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார்.
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து ரௌடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி ஒரு சில திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது இவர்களது தயாரிப்பில் கூழாங்கல் என்ற படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் பிஎஸ் வினோத் ராஜ் இயக்கியுள்ளார். மேலும், யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
இந்த நிலையில், உக்ரைன் நாட்டில் நடக்க இருக்கும் 50ஆவது மோலோடிஸ்ட் கெய்வ் சர்வதேச திரைப்பட விழாவில் கூழாங்கல் படம் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த 29 ஆம் தேதி முதல் வரும் 6 ஆம் தேதி வரையில் இந்த விழா நடக்கிறது. இதற்கு முன்னதாக, நெதர்லாந்தில் உள்ள ரோட்டர்டாம் என்ற நகரில் நடந்த டைகர் காம்படிஷன் இன்டர்நேஷனல் திரைப்பட விழாவில் கூழாங்கல் படம் திரையிடப்பட்டது.
இதே போன்று நியூயார்க்கில் நடந்த டைரக்டர்ஸ் நியூ திரைப்பட விழாவில் கூழாங்கல் படம் திரையிடப்பட்டது. அதோடு, சிறந்த படத்துக்கான விருதும் கூழாங்கல் படம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.