கொரோனா பரவல் காரணமாக வரும் 31 ஆம் தேதி வரையில் திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் உள்ளிட்ட பணிகள் எதுவும் நடைபெறாது என்று பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதி இல்லை. மேலும், ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் பிரபலங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என்று பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். அண்மையில், சன் டிவி நிறுவனம் ரூ. 30 கோடி கொரோனா நிவாரண நிதியாக அளித்திருந்தது.
தமிழக முதல்வர் கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டுகோள் வைத்திருந்தார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குங்கள். பொது மக்கள், சமூக நல அமைப்புகள், பெருந்தொழில் நிறுவனங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்…ரூ.10 லட்சத்திற்கு மேல் நிதியுதவி வழங்குபவர்களின் பெயர்கள் பத்திரிகையில் வெளியிடப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.
தல அஜித் முதல்வரின் கொரோனா நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் வழங்கியுள்ளார். இது குறித்து அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா கூறியிருப்பதாவது: வங்கி பரிவர்த்தனை மூலமாக அஜித் குமார் முதல்வரின் கொரோனா நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் வழங்கியுள்ளார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், பெப்சி சம்மேளன தலைவர் ஆர்கே செல்வமணி கூறியிருப்பதாவது: வரும் 31 ஆம் தேதி வரையில் திரைத்துறை மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் உள்ளிட்ட பணிகள் எதுவும் நடைபெறாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும், பெப்சி தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், நடிகர் அஜித்குமார் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக கடந்த ஆண்டும் இதே போன்று பெப்சி தொழிலாளர்களுக்கு தல அஜித் ரூ.25 லட்சம் வழங்கியிருந்தார். கொரோனா நிவாரண நிதியாக ரூ.50 லட்சமும், பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.