கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட கையோடு ரசிகர்களுக்கு நடிகர் ஜீவா வேண்டுகோள் வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஜீவா. ராம், நண்பன், என்றென்றும் புன்னகை என்று ஒரு சில படங்களின் மூலமாக நன்கு அறியப்பட்டார். அண்மையில், ஜீவா நடிப்பில் உருவான களத்தில் சந்திப்போம் படம் வெளியானது. எனினும், போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை. தற்போது 83 என்ற பாலிவுட் படமும், மேதாவி என்ற தமிழ் படமும் கைவசம் உள்ளன.
நாட்டையே உலுக்கி வரும் கொரோனா 2ஆவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கொரோனாவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் உயிரிழந்துள்ளனர். கொரோனா தாக்கம் காரணமாக பலரும் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். அதோடு, மக்களையும், ரசிகர்களையும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி வலியுறுத்தி வருகின்றனர்.
முன்னதாக மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கும் மக்களிடையே தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே தடுப்பூசி போட்டுக்கொண்டார். தற்போது அருண் விஜய், சிம்ரன் ஆகியோர் உள்பட பிரபலங்கள் பலரும் தடுப்பூசி போட்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது நடிகர் ஜீவாவும் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். மேலும், அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என்றும், வீட்டில் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்துள்ளார்.