சூர்யாவின் சூரரைப் போற்று படத்தில் நடித்த நடிகர் காளி வெங்கட் புதிய படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு திரைக்கு வந்த வ படம் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் காளி வெங்கட். தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்து வந்த காளி வெங்கட்டிற்கு மாரி, இறுதி சுற்று, கொடி, வேலைக்காரன், ராட்சசன் மாரி 2, மெர்சல், சூரரைப் போற்று, ஈஸ்வரன் ஆகிய படங்கள் நல்லவொரு அடையாளத்தை கொடுத்தது. திரைக்கு வந்து 10 ஆண்டுகள் ஆன நிலையில் 50 படங்கள் வரை நடித்துள்ளார். இவ்வளவு ஏன், திரவம் என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார்.
தற்போது இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டான் படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதுவரை குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த காளி வெங்கட் முதல் முறையாக ஹீரோவாக நடிக்க இருக்கிறார். அமலா பால் நடித்த ஆடை பட தயாரிப்பாளர் விஜி சுப்ரமணியன் தயாரிக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இவருக்கு ஜோடியாக பிக்பாஸ் தமிழ் சீசன் 2 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னரான ரித்விகா நடிக்க இருக்கிறார்.
மேலும், இந்தப் படத்தின் மூலமாக பிரம்மா என்பவர் இயக்குநராக அறிமுகமாகிறார். படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.