சகோதரன் குட்லக் சதீஷை இழந்தது போல இன்னொருவரை இழக்க விரும்பவில்லை என்று நடிகர் சிம்பு தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக சினிமா பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதோடு, கொரோனாவுக்கு இயக்குநர் கே வி ஆனந்த், கோமகன், பாண்டு, தயாரிப்பாளர் கலைச் செல்வன், தாமிரா என்று பிரபலங்கள் பலரும் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், நடிகர் சிம்புவின் தீவிர ரசிகரான குட்லக் சதீஷ் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.
இது தொடர்பாக சிம்பு அறிக்கை வெளியிட்டு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: அன்புத் தம்பியும், “காதல் அழிவதில்லை” படத்திலிருந்து என்னோடு கூட இருந்து வரும் சகோதரனுமான குட்லக் சதீஷை அகாலத்தில் இழந்திருக்கிறேன்.
கொரோனா என்றவுடன் மருத்துவ உதவிக்கெல்லாம் பேசி, நம்பிக்கையோடு மீண்டு வருவாய் என்று ஆறுதல் சொல்லி மருத்துவமனைக்கு அனுப்பினேனே…?!
அங்கு எடுத்துப் போகும் உடல்களைப் பார்த்ததும் பயந்தது ஏன் சகோதரா?
பயந்து உன் இதயத் துடிப்பை நிறுத்திக் கொண்டது ஏன் சகோதரா?
உன் எதிர்ப்பு சக்தி மீது நம்பிக்கை வைக்காமல் போனதேன் சகோதரா?? துயர் கொள்கிறேன்.
உன்னை இழந்துவிட்டதை நம்ப முடியாமல் தவிக்கிறேன். உன் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லாது தவிக்கிறேன்.
நீ செய்த எல்லா உதவிகளுக்கும் நன்றி, அவசரப்பட்டுவிட்டாய். போய் வா சகோதரா.
அழுகையோடு வழியனுப்பி வைக்கிறேன்.
ரசிகர்களே… நண்பர்களே. சகோதர சகோதரிகளே… நோய்வாய்ப்பட்டால் தயவுசெய்து நிலை குலையாதீர்கள்.
பயம் தான் நம்மை வீழ்த்துகிறது. பயம்தான் நாம் நோயிலிருந்து குணமாவதைத் தடுக்கிறது.
சாதாரண நோயை தீவிர நோயாக்குவதும் பயம்தான். நிலைகுலைதல் தான் இதயத்தைத் தாக்குகிறது.
தயவுசெய்து மீண்டுவிடுவோம் என்ற நம்பிக்கையில் மருத்துவம் செய்து கொள்வோம்.
நோயெதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள். அதேசமயம் மனதிடத்தையும் பெருக்கிக் கொள்வோம்.
தேவையான மருத்துவம் பார்ப்பதோடில்லாமல் தேவையற்று வெளியே செல்வதைத் தவிர்ப்போம்.
இழப்புகள் தாங்க முடியாததாக இருக்கிறது. பாதுகாப்பாக இருப்பதே கொரோனாவை விரட்டும் மருந்து. புரிந்துகொள்வோம்.
சகோதரன் குட்லக் சதீஷை இழந்தது போல இன்னொருவரை இழக்க விரும்பவில்லை.
வருத்தங்களுடன் முடிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
My hearty condolences Nanba #STR https://t.co/OEXOXdPB0s
— A. JOHN- PRO (@johnmediamanagr) May 15, 2021