விஜய் அடுத்ததாக நடிக்க இருக்கும் தளபதி66 படத்தை தெலுங்கு இயக்குநர் ஒருவர் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
மாஸ்டர் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் தளபதி65. தற்காலிகமாக தளபதி65 என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
மேலும், யோகி பாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் பலர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. பேன் இந்தியா படமாக தளபதி65 படம் உருவாக்கப்படுகிறது. தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்துவிட்டு விஜய், ஜார்ஜியாவில் நடந்த தளபதி65 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ள அங்கு சென்றுவிட்டார். கிட்டத்தட்ட ஒரு மாதம் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு அதன் பிறகு சென்னை திரும்பினார்.
இதைத் தொடர்ந்து 2ஆவது கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால், தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக சினிமா பிரபலங்கள் பலரும் பாதிக்கப்படுவதோடு, பலரும் பலியாகி வருகின்றனர். ஏற்கனவே இயக்குநர் கே வி ஆனந்த், தாமிரா, நடிகர் பாண்டு, டி கே எஸ் நடராஜன் ஆகியோர் பலரும் கொரோனாவுக்கு பலியாகியிருந்தனர்.
இந்த நிலையில், பல தொழிலாளர்கள் உதவியுடன் சென்னையில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் தளபதி65 படத்திற்கான செட் வேலைகள் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக அதனை உடனடியாக நிறுத்தும் படி விஜய், தளபதி65 படக்குழுவினரை கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தளபதி65 படத்தின் 2ஆவது கட்ட படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் மீண்டும் தளபதி65 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய், தளபதி66 பட த்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. ஆனால், இயக்குநர் யார் என்பதில் எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை. மாறாக, லோகேஷ் கனகராஜ், அட்லி, ஹெச் வினோத் ஆகியோருக்கு இடையில் கடும் போட்டி நிலவியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது தளபதி66 படத்தின் இயக்குநர் குறித்து ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி தெலுங்கு இயக்குநர் வம்சி, தளபதி66 படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படம் தொடர்பான கதையை ஸ்கைப் மூலமாக விஜய்க்கு கூறியுள்ளார். கதை கேட்ட விஜய்யோ, சிறிது காலம் காத்திருக்க சொல்லியிருக்கிறார் என்று கூறப்படுகிறது.