கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நகைச்சுவை நடிகர் பாண்டு இன்று உயிரிழந்தார்.
கடந்த 1981 ஆம் ஆண்டு திரைக்கு வந்த கரையெல்லாம் செண்பகப்பூ என்ற பட த்தின் மூலம் தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமானர் நடிகர் பாண்டு. அதற்கு முன்னதாக மாணவன், சிரித்து வாழ வேண்டும் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்தப் படங்களில் இவரது கதாபாத்திரங்கள் பெரிதாக பேசப்படவில்லை. அதோடு, பாண்டு என்றால், யாருக்கும் தெரியாத ஒரு கதாபாத்திரம்.
அதன் பிறகு சினிமாவில் கொடிகட்டி பறக்கும் அளவிற்கு தனது நகைச்சுவை கதாபாத்திரத்தின் மூலமாக புதிய உச்சம் தொட்டார். பணக்காரன், ரிக்ஷா மாமா, நாட்டாமை, முத்து, கோயம்புத்தூர் மாப்பிள்ளை, தர்ம சக்கரம், கோகுலத்தில் சீதை, கங்கா கௌரி, வாலி, குட் லக், பத்ரி, கில்லி, சிங்கம், இந்த நிலை மாறும் என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
நடிகரோடு மட்டுமல்லாமல், சிறந்த ஓவியராகவும் இருந்துள்ளார். அதிமுகவின் சின்னம் மற்றும் கொடியை வடிவமைத்தவர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். அதோடு, கேப்பிட்டல் லெட்டர்ஸ் என்ற நிறுவனத்தின் நடத்தி அதன் மூலமாக பிரபலங்கள் வீடுகளில் பெயர் பலகையை அழகாக வடிவமைத்துள்ளார்.
இந்த நிலையில், 74 வயது நிரம்பிய நடிகர் பாண்டு கொரோனா காரணமாக கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பாண்டுவின் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பாண்டுவின் மனைவி குமுதாவிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.