கொரோனா தடுப்பு பணிகளுக்காக நடிகை நிதி அகர்வால் ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதி இல்லை. மேலும், ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் பிரபலங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என்று பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டுகோள் வைத்திருந்தார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குங்கள். பொது மக்கள், சமூக நல அமைப்புகள், பெருந்தொழில் நிறுவனங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்…ரூ.10 லட்சத்திற்கு மேல் நிதியுதவி வழங்குபவர்களின் பெயர்கள் பத்திரிகையில் வெளியிடப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, சினிமா பிரபலங்கள் பலரும் நிவாரண நிதி அளித்து வருகின்றனர். நடிகர்கள் சிவக்குமார், சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் குடும்பமாக ரூ.1 கோடி, இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தலா ரூ.25 லட்சம், தல அஜித் ரூ.25 லட்சம், இயக்குநர் சி எஸ் அமுதன் ரூ.50 ஆயிரம் என்று நிதியுதவி அளித்துள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது Apex Laboratory நிறுவனம் சார்பாக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கியுள்ளார். கவிஞர் வைரமுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்துள்ளார். அப்போது கொரோனா நிவாரண நிதியாக ரூ.5 லட்சம் வழங்கியுள்ளார். இயக்குநர் ஷங்கரும் ரூ.5 லட்சம் கொரோனா நிவாரண நிதி வழங்கியுள்ளார்.
தனுஷின் பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, அசுரன் ஆகிய படங்களை கொடுத்த இயக்குநர் வெற்றிமாறன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார். அவருடன் சேப்பாக்கம் தொகுதி எம் எல் ஏ உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தார்.
நடிகரும், தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்து கொரோனா தடுப்புப் பணிக்காக ரூ.25 லட்சத்திற்கான காசோலையை வழங்கியுள்ளார். ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். இந்த நிலையில், சியான் விக்ரம் ஆன்லைன் பரிவர்த்தனை மூலமாக ரூ.30 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்து கொரோனா நிவாரண நிதியாக ரூ.10 கோடிக்கான காசோலையை வழங்கியுள்ளார். அப்போது அவருடன் துர்கா ஸ்டாலினி, காவேரி கலாநிதி மாறன் ஆகியோர் உடனிருந்தனர். அண்மையில், சன் டிவி நிறுவனம் ரூ. 30 கோடி கொரோனா நிவாரண நிதியாக அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சிம்பு நடித்த ஈஸ்வரன் பட த்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அவதாரம் எடுத்த நடிகை நிதி அகர்வால் முதல்வரின் கொரோனா நிவாரண நிதியாக ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். இதுவரை எந்த நடிகையும் நிதியுதவி அளிக்கவில்லை என்று கூறும் நிலையில், புது நடிகை ஒருவர் ஒரு லட்சம் நிதியுதவி அளித்திருப்பது அனைவரிடமும் பாராட்டை பெற்றுள்ளது.
Actress @AgerwalNidhhi has donated ₹ 1,00,000/- to @CMOTamilnadu ‘s Chief Minister Public Relief Fund @mkstalin @Udhaystalin @arivalayam
Nice gesture..#NidhhiAgerwal #CovidRelieffund pic.twitter.com/0s3I9KGjjB
— Ramesh Bala (@rameshlaus) May 18, 2021